Thursday 8 April 2010

புல் புல்லால் ஆனது.

இன்று எழுதவேண்டும் என தோன்றியது சரியாக எப்பொழுது எனத்தெரியவில்லை. தொட்டிச்செடிகளின் வேர்கள் சிறைபட்டிருக்கும் பிளாஸ்டிக் குடுவைகள் கோடை வெயிலுக்கு நெகிழ்வதை கண்ட நொடியில் அல்ல என்பது மட்டும் உறுதி. புழுதியில் விளையாடிய சிறுவனின் ஒழுங்கற்ற தலைமுடியைப்போல திசைக்கொன்றாய் நீண்டு கிடந்தது புல். ரோஜா செடியின் கீழ் புல். மல்லிகையின் கீழ், மரிக்கொழுந்தின் கீழ், இன்னமும் பெயர்தெரியா பல வண்ணச் செடிகளின் கீழ் விதவிதமாய் புற்கள். மலர்களுக்கான தோட்டம் மட்டுமல்ல அது ஆனால் தோட்டம் புற்களால் ஆனது எனும் வகையில் நீக்கமற அனைத்து தொட்டியிலும் நிரம்பிவழிகிறது.

எனக்கு புற்களை பார்க்கவே பிடித்திருக்கிறது. எப்போது மலரும் எனும் எதிர்பார்பின் அழுத்தம் இன்றி வளர்வதால் இருக்கலாம். தண்ணீர் ஊற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயங்கள் இல்லை, அதனாலும் இருக்கலாம். ஆனால் அது புல் என்பதால் மட்டுமே என்பதே பொருத்தம். புல் தானாகவே வளர்கிறது. நாங்கள் தண்ணீர் ஊற்றூவதாலும் வளர்கிறது. செடிகளின் நீரை உறிஞ்சி, அதன் வேர்களை மூச்சுமுட்ட செய்கிறது எனும் குரல் வீட்டில் அடிக்கடி ஒலிக்கும். பரபரக்கும் விரல்கள் ஒரு நொடியில் அதை பிடுங்கி, சிதைத்து எறிந்துவிடும். கோபம் ஏதுமின்றி நான்காவது நாள் துளிர்விடும் இளந்தளிரின் குழந்தைத்தனம், நம்பிக்கை உங்களை மீண்டும் மீண்டும் புரட்டிப்போடும். நின்று அதை கவனிக்கும் ஒரு நொடியில் வாழ்வின் பொருளை இயல்பாக சொல்லிவிடும், மாலை காற்றுக்கு மெலிதாய் அசைந்தபடியே.

பூக்களை எங்கும் காணலாம்,எதுவாகவும் பார்க்கலாம். புல்லை புல்லாக மட்டுமே பார்க்க இயலும். எனவே பூவுக்காக பூ வளர்க்காமல் புல்லிற்காகவே புல் வளர்த்த கல்யாண்ஜி போலவே நீங்களும் ஒரு கவிதையை நீரூற்றி வளர்க்கலாம் நாள்தோறும். எத்தனை பறவை, எத்தனை பட்டாம்பூச்சி பார்த்தாலும் நமக்கு அது ஒரு பறவை, ஒரே பட்டாம்பூச்சி. அதுபோலவே புல்லும். விதம்விதமாக - பச்சை, சிவப்பு, வெளுப்பு, நீளம், உயரம், வேர் என எப்படி பார்த்தாலும், நாம் பார்ப்பதெல்லாம் ஒரே புல்தான்.

புல் புல்மட்டுமே அல்ல, பொருளும் பயனும் அற்ற பெருவெளியின் பண்முகத்தை நமக்கு வெளிப்படுத்தும் ஒரு ஒளிக்கீற்று. ஆதிமுதல் இன்று வரை அதே புல்தான். அதே விரல்கள் தான். அதே புறக்கணிப்பு தான். ஆனாலும் புல்லின் வாழ்க்கை புல்லால் ஆனாது. புல்லாகவே ஆனது. நாம் கவனிக்காத ஒரு நொடியில் நமக்கான ஒரு செய்தியை சுமந்தபடி, புல் புல்லாகவே சமைந்துவழிய, நாம் எதுவாவோ இருக்க முனைந்து எதுவாகவுமின்றி தொலைந்துபோகின்றோம்.

புல் எல்லோருக்குமானது. உங்களுக்கான புல் உங்கள் காலடியிலேயே காத்துகிடக்க, உங்கள் புல்லுக்கான நீங்கள் என்றுமே கண்டடைய முடியா சோகத்தை தன்னுள் புதைத்து, ஏமாற்றத்தின் குறிப்புகளின்றி தினமும் அசைகிறது ஒரு புல்.